திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே மோட்டாத்தூர் என்கின்ற கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் 120க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பயன்படும் வகையில் அய்யனார் கோவில் குளம் உள்ளது. அரசு தரப்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பல்வேறு குளங்களை தூர்வாரினாலும், இந்தக் குளம் தூர்வாரப்படவில்லை.
இதுபற்றி அப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தும் பலன் இல்லாமல் போனது. இதனையடுத்து அப்பகுதி மக்களுக்கு உதவும் வகையில், உதயநிதி ஸ்டாலின் ரசிகர்மன்ற நிர்வாகிகள் வாய்காலில் இருந்து குளத்திற்கு குழாய் அமைத்துக்கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து இக்குளம் தற்போது நீரால் நிரம்பி காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் தேவைக்கும் கால்நடைகளின் பயன்பாட்டிற்கும் குளம் உபயோகமாக உள்ளது என கூறி உதயநிதி ரசிகர்மன்ற ரசிகர்களுக்கு அப்பகுதி நன்றியை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் ரசிகர்மன்ற மாவட்ட பொருளாளர் இளவரசன் கூறுகையில், இப்பகுதி மக்கள் கடந்த எட்டு வருடங்களாக இந்தக் குளம் கால்நடைகளுக்கும், பாசனத்திற்கும் பயன்படாமல் வேதனைபட்டு வந்தனர்.
இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று எங்களால் முடிந்த அளவு தண்ணீர் வருவதற்கு குழாய் அமைத்து ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம். இதனை உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பரிசாக சமர்ப்பிக்கிறோம் என்றார்.