திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல் குறித்து சுகாதாரத்துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.
திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற பயிற்சி முகாமில் ஒன்றியக்குழு தலைவர் தேவா, வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரலிங்கம் ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதில் யோகா, இயற்கை மருத்துவ பிரிவு மருத்துவர்கள், கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் யோகாவின் மூலம் மூச்சு பயிற்சியை மேற்கொண்டு நுரையீரலை பலப்படுத்துவது மன அழுத்தத்தை போக்குவது குறித்தும் பல்வேறு பயிற்சிகளை அளித்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அனைத்து அலுவலர்களுக்கும் இந்த பயிற்சி என்பது நடைபெறும் எனவும், தங்களுடன் பணியாற்றும் சக ஊழியர்களில் யாருக்கும் தொற்று ஏற்பட்டால் அதனால் மற்ற ஊழியர்கள் மனதளவில் பாதிக்காமல் இருக்க இது போன்ற பயிற்சிகளை மேற்கொண்டால் பணியில் முழு கவனம் செலுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.