தமிழ்நாட்டில் கரோனாவின் இரண்டாவது அலையானது வேகமெடுத்து தீவிரமாகப் பரவிவருகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளானது அதிகரித்து காணப்படுகிறது.
எனவே இதற்கு தமிழ்நாடு அரசானது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றது. குறிப்பாக மக்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அறிவித்தது.
இதன் எதிரொலியாக நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் அனைவரும் இன்றே நாளைய தேவைக்கான பொருள்கள் வாங்கினர்.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் முக்கிய நகர்ப்புறக் கடை வீதிகள், மார்க்கெட் வீதிகளில் அத்தியாவசியப் பொருள்களான காய்கறிகள், மீன், இறைச்சி உள்ளிட்ட பொருள்களை வாங்க தகுந்த இடைவெளியை மறந்து, முகக் கவசங்கள் இன்றி அத்தியாவசியப் பொருள்கள் வாங்க குவிந்துள்ளனர். இதனால் அம்மாவட்டத்திற்கு கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களின் இந்தச் செயற்பாட்டிற்கு மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகத்தினரும் கரோனா குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தாமல் அலட்சியம் காட்டிவருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.