திருவாரூர் தியாகராஜ சுவாமி தேரடி அருகே உள்ளது ஆயிரம் ஆண்டுகள் பழமையான மிகவும் பிரசித்திபெற்ற வீர ஆஞ்சநேயர் கோயில். இங்கு குடமுழுக்கு விழா 200 வருடங்களுக்குப் பிறகு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி செவ்வாய்க்கிழமை யாக சாலை பூஜைகள் நடைபெற்றுவந்தன. இன்று காலை மூன்றாம் கால யாக பூஜை, தீபாராதனை நடைபெற்று, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை மங்கள வாத்தியங்கள் இசைக்க, பட்டாச்சாரியார்கள் எடுத்து ஆலய வலம்வந்து ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் விமானக் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு செய்தனர். இந்தக் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த வீர ஆஞ்சநேயர் கோயிலில் தான் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தனது இளமைப் பருவத்தில் தமிழ் மாணவர் மன்றம் அமைத்து, முதன் முதலில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.