திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தற்போது வரை 60,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் குறைந்த அளவு தண்ணீர் செல்வதால் பாசன வாய்க்காலுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பா நெல் சாகுபடி பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் ஓகைப்பேரையூர் கிராமத்தில் வெள்ளையாற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வெள்ளையாற்றில் குறைந்த அளவு நீர் செல்வதால் அதிலிருந்து பிரியக்கூடிய வாய்க்காலிலும் குறைந்த அளவு தண்ணீர் செல்கிறது இதனால் ஓகைப்பேரையூர் கிராமத்தில் விதை தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், விவசாய நிலத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் விதை தெளிக்க முடியாமல் விவசாயிகள் இருந்து வந்த நிலையில், வாய்க்காலில் செல்லக்கூடிய குறைந்த அளவு தண்ணீரை அன்னக்கூடை மூலம் விவசாய நிலத்திற்கு பாய்ச்சி வருகின்றனர். ஆகையால், வெள்ளையாற்றில் முறை வைக்காமல் கூடுதல் தண்ணீர் திறந்து விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து விவசாயி ராமமூர்த்தி கூறுகையில், “எனக்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது. தற்போது வரை மோட்டாரை வைத்துதான் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றோம். ஆனால், மோட்டாரை வைத்து தண்ணீர் இரைக்க வேண்டுமானால், ஏக்கருக்கு 5,000 ரூபாய் செலவு ஆகிறது. இதனால் சாகுபடி செய்தும் எங்களுக்கு எந்த பலனும் கிடையாது.
இதனால் மிகுந்த வேதனையில் சென்ற வருடம் நிலத்தைப் பயிரிடாமல் விட்டதால் நிலம் வாடிவிட்டது. கடந்த 20 ஆண்டுகளாக ஆற்றில் தண்ணீர் வரத்து போதுமான இல்லாத காரணத்தால் பருவமழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்து வருகின்றோம். அரசு அதிகாரிகள் இதில் உடனடியாக தலையிட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால், காலத்திற்கும் எங்களால் விவசாயம் செய்திட முடியாது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கனடா நாடாளுமன்றத்தில் முன்னாள் நாஜி அதிகாரிக்கு கவுரம்! மவுனம் கலைத்த ஜஸ்டீன் ட்ரூடோ! அப்படி என்ன சொன்னார்?