திருவாரூர் அருகே உள்ள கொட்டாரக்குடி பகுதியிலுள்ள காட்டாறு, கள்ளிக்குடி பகுதிக்குட்பட்ட ஓடம்போக்கியாறு ஆகிய ஆறுகளைத் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தா, சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதனையடுத்து பேசிய பூண்டி கலைவாணன், "விவசாயிகளின் தேவைகளை அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகிறார்.
அந்தவகையில் முதலமைச்சரால் தூர்வாரும் திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் ஆறுகளிலுள்ள மண் திட்டுக்கள், காட்டாமணக்குச் செடிகள் ஆகியவற்றை அகற்றித் தூர்வாரும் பணி மேற்கொள்வதற்காக, திருவாரூரில் 174 பணிகள் மூலம் 1,282.35 கி.மீ நீளத்திற்கு 1,634.25 லட்சத்திற்குப் பணிகள் எடுக்கப்பட்டுள்ளன.
விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு, முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்றையதினம், திருவாரூர் அருகே உள்ள காட்டாறு ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலும், திருவாரூர் வட்டம் ஓடம்போக்கியாறு ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும் தூர்வாரும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன" எனக் கூறினார்.