திருவாரூர்: தஞ்சாவூர் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக சுமார் ரூ. 350 கோடி மதிப்பீட்டில் புதிய நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக நிதி ஓதுக்கப்பட்டு, பணிகள் முடுக்கி விடப்பட்டன. அந்த பணிகள் கடந்த % ஆண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், தற்போது சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. சாலைகளில் உள்ள பள்ளங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக திருவாரூர் வழியாக செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ,அரசு மருத்துவக்கல்லூரி எதிர்ப்புறம், திருவாரூர் அரசு கலைக்கல்லூரி மற்றும் முகந்தனூர், அடியக்கமங்கலம்,வாளவாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வாகன நெரிசல் உள்ள இடங்களில் உள்ள சாலைகள் பெரும் பள்ளங்களா மாறி அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து, பெரும் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், இரவு நேரங்களில் அதிகமாக வாகன ஓட்டிகள் சாலையில் தவறி விழுந்து காயம் ஏற்படுவதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கோடு செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
சேதமடைந்த சாலைகளால் உயிரிழப்புகள் ஏற்படும் போது நெடுஞ்சாலை துறை அலுவலர்களிடம் சென்று முறையிட்டால், பேட்ச் ஒர்க் மட்டும் பார்த்து விட்டு செல்கின்றனர். மழைக்காலங்களில் சாலை மீண்டும் பழைய நிலையில் குண்டும் குழியுமாக மாறி விடுவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தஞ்சாவூர் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும் ஏற்படுவதால், இந்த தேசிய நெடுஞ்சாலையை செப்பனிட்டு தரமாக அமைத்துத் தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 10,12ஆம் வகுப்புகளில் முதல் நாளிலேயே 85 விழுக்காட்டிற்கும் மேல் மாணவர்கள் வருகை