திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள மேல ஆலத்தூரில் இருந்து சின்ன ஆலத்தூர்வரை சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் பிரதம மந்திரியின் திட்டத்தின் கீழ் சுமார் 186.54 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது.
தற்போது இந்த சாலையானது கீழ ஆலத்தூர் பகுதி அருகே சாலை முழுவதும் உள்வாங்கியுள்ளது. சாலை போடப்பட்டு மூன்று மாதங்களில் உள்வாங்கியதால், சாலையை பயன்படுத்தும் கிராம மக்கள் இரவு நேரங்களில் தடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்பாக சாலை பணிகள் நடந்து முடிந்தன. ஆனால், பணிகள் முடிந்த 10 நாள்களிலேயே ஆற்றின் கரை பலம் இல்லாததால் சாலை முழுவதுமாக உள்வாங்கியதில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
சாலையை தரமில்லாமல் அப்பளம் போல் கடமைக்காக போட்டுள்ளனர். மூன்று கிலோமீட்டர் வரையிலும் பல்வேறு இடங்களில் விரிசல்கள் விழுந்துள்ளன. சாலை போடப்பட்டு மூன்று மாதங்களிலேயே இந்த நிலைமை என்றால் இனிவரும் காலங்களில் சாலை இருக்குமா என்பதே தெரியாமல் உள்ளது.
இதுகுறித்து பலமுறை வட்டாட்சியர், ஊராட்சித் தலைவரிடம் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் இவற்றை கவனத்தில் கொண்டு நூலாற்றின் கரையோரத்தில் தரமான கான்கிரீட் சுவர்கள் அமைத்து கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குண்டும் குழியுமான சாலை...சீரமைக்கக்கோரும் மக்கள்