திருவாரூர்: வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கிடங்கில் நடைபெற்றுவரும் பருத்தி ஏலத்தினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு இன்று (ஜூலை 20) ஆய்வுமேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், "திருவாரூர் விற்பனைக்குழுக் கட்டுப்பாட்டில் உள்ள திருவாரூர் பூந்தோட்டம், குடவாசல், வலங்கைமான் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஜூன் 15ஆம் தேதிமுதல் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றுவருகிறது.
பருத்தி கொள்முதல்
செவ்வாய்க்கிழமைகளில் திருவாரூர், பூந்தோட்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும், வெள்ளிக்கிழமைகளில் வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றுவருகிறது.
இந்த மறைமுக ஏலத்தில் திருப்பூர், விழுப்புரம், தேனி, திண்டுக்கல், கும்பகோணம், செம்பனார்கோவில் ஆகிய பகுதிகளிலிருந்து வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொள்கின்றனர்.
திருவாரூர் விற்பைனக் குழுவின் கீழ் இயங்கும் திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 14 ஆயிரத்து 631 குவிண்டாலும், பூந்தோட்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மூன்றாயிரத்து 657 குவிண்டாலும், குடவாசல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இரண்டாயிரத்து 598 குவிண்டாலும், வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஆயிரத்து 458 குவிண்டாலும் ஆக மொத்தம் 22 ஆயிரத்து 345 குவிண்டால் பருத்தி கொள்முதல்செய்யப்பட்டுள்ளது.
பருத்திக்கு நல்ல விலை
இதில் சுமார் 16 ஆயிரத்து 200 மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதுவரை 14 கோடியே 51 லட்சம் மதிப்பிலான பருத்தி ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக குவிண்டால் ஏழாயிரத்து 777 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக ஐந்தாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டைக் காட்டிலும், இந்தாண்டு பருத்திக்கு நல்ல விலை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்" எனக் கூறினார்.
இந்த ஆய்வில் வேளாண்மை இணை இயக்குநர் சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.