திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுகாளியமான் கோயில் தெருவைச் சேர்ந்தவர், முனியாண்டி மகன் கருப்பையா(70). இவர் கோயிலில் மாந்திரீகம் மற்றும் குறி பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, இவரது வீட்டு பீரோவில் இருந்த 48 சவரன் தங்க நகைகள் திடீரென்று காணாமல் போனது.
இதனால் அதிர்ச்சியடைந்த கருப்பையா, வீட்டில் உள்ளவர்கள் யாரேனும் எடுத்திருப்பார்களோ? என்ற சந்தேகத்தில் ரகசியமாகத் தேடி வந்துள்ளார். இருப்பினும் காணாமல் போன நகைகள் கிடைக்கவில்லை. இதனையடுத்து, நேற்று முன்தினம் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கருப்பையா புகார் செய்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான காவல் துறையினர், தனிப்படை அமைத்து தீவிர விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று (ஜூன் 29) கருப்பையாவின் உடன் பிறந்த தம்பியான சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் கிருஷ்ணா நகர் பகுதியைச்சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் கௌசல்யா(22) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவரின் செல்போனை ஆய்வு செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அவ்வாறு நடைபெற்ற விசாரணையில், “இரண்டு மாதங்களுக்கு முன்பு கருப்பையாவின் மனைவி (கௌசல்யாவின் பெரியம்மா) இறந்த துக்க நிகழ்வுக்கு வந்திருந்தபோது, பீரோவில் இருந்த 48 சவரன் நகையைத் திருடி எடுத்துச்சென்றேன். மேலும் நகைகளில் 20 சவரன், சிவகங்கை மாவட்டம் ஏஆர்.மங்கலம் பகுதியைச் சேர்ந்த மாய அழகு மகன் கரிகாலன் என்பவரிடமும் இருக்கிறது” என கெளசல்யா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து முதல் கட்டமாக கெளசல்யாவிடம் இருந்த 28 சவரன் நகைகளை பறிமுதல் செய்த காவல் துறையினர், கௌசல்யாவை திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், மீதமுள்ள 20 சவரன் நகைகளை மீட்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பல்துலக்காமல் முத்தம் கொடுத்த கணவன் - தடுத்த கோவை பெண் வெட்டிக்கொலை