ஆசு என்றால் தவறு. ஆசுக்கள் என்றால் தவறை அகற்றுபவர். இவர்களுக்கு ஆசிரியர் என்று பெயர்வைத்து தமிழ்நாடு முழுவதும் அழைக்கப்பட்டுவருகிறார்கள்.
தாய், தந்தை, குரு, தெய்வம் எனக் கூறுவோம். தெய்வத்திற்கு முன்னால் மூன்றாடமிடம் கொடுத்துவைத்திருக்கிறோம். உலகின் எவ்வளவு பெரிய இடத்திற்கு ஒருவர் சென்றாலும், அவர் ஆசிரியருக்கு மாணவன்தான். ஆசிரியர் தினத்தைக் கொண்டாடிவரும் இந்த வேளையில், தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் செல்வசிதம்பரம் (40) என்பவரைச் சந்தித்தோம்.
இந்த நல்லாசிரியர் விருதுபெறுவோருக்கான தகுதியாக 15 ஆண்டுகளுக்கு மிகாமல் சேவை செய்திருக்க வேண்டும் என்பதோடு, சமுதாயத்தில் கண்ணியமானவராகவும், புகழ்மிக்கவராகவும் இருத்தல் வேண்டும். அதேபோல் மாணவர்களிடத்தில் அன்புமிக்கவராகவும், சமுதாய நலனில் பங்குகொள்பவராகவும் இருக்க வேண்டும்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றிவருபவர்தான் செல்வசிதம்பரம். 2004ஆம் ஆண்டு அரசு ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர், இதுவரை மூன்று பள்ளிகளில் பணியாற்றியிருக்கிறார்.
அந்த அனுபவத்தைப் பற்றி கேட்கையில், ''ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு விதம். தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் வாய்ப்பு அனைத்து மக்களுக்கும் கிடைத்துள்ளது என்றாலும், மாணவர்களின் கற்றல் பாதியோடு தடைப்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு.
அதில் முதன்மையானவை குடும்பச் சூழலும், சமுதாயப் பிரச்னையும்தான். பள்ளிக்குச் சென்ற ஓரிரு ஆண்டுகளில் அனைத்து மாணவர்களைப் பற்றியும் தெரிந்துகொள்வேன். அவர்களின் திறமைக்கு எது தடையாக இருக்கிறதோ அதனைச் சரிசெய்துவிட்டால், மாணவர்களின் கற்றலில் பெரும் முன்னேற்றத்தைக் காணலாம்'' என்கிறார்.
இப்படிக் கூறுவதோடு செல்வசிதம்பரம் நின்றுவிடவில்லை. மாணவர்களின் குடும்பப் பிரச்னைகளைச் சரிசெய்தால்தான், அவர்கள் கல்வி கற்க வேண்டும் என்ற மனநிலைக்கு வருவார்கள் என்றெண்ணி அவர், பல மாணவர்களின் குடும்பப் பிரச்னையும் சரிசெய்துள்ளார்.
2018ஆம் ஆண்டு டெல்டா பகுதிகளில் வீசிய கஜா புயல், அப்பகுதி மக்களின் வாழ்க்கையில் பெரும் புயலாக வீசியது. பலரும் வீடுகளை இழந்து நிர்க்கதியாய் நின்றனர். ஏன் கஜா புயலின் சுவடுகள் இன்று வரையிலும் சிலர் வாழ்வில் மறையாமல் உள்ளது.
அப்போது செல்வசிதம்பரம் பணியாற்றும் பள்ளியில் படித்த ஐந்து மாணவர்களின் வீடுகள் புயலால் சிதைந்தன. அப்போது மாணவர்களுடன் தோழனாக நின்று அனைவருக்கும் தனது நண்பர்கள், சமூக வலைதள நண்பர்களின் உதவிகளோடு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்ல கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரையிலும் நண்பர்கள் மூலம் பலருக்கும் உதவியுள்ளார். கஜா புயல் நிவாரண பணியில் சிறப்பாகப் பணியாற்றியதற்கு அம்மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழோடு பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
இன்றைய சூழலில் 5ஆம் வகுப்பிற்குப் பொதுத்தேர்வு, 8ஆம் வகுப்பிற்குப் பொதுத்தேர்வு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, நீட், ஜேஇஇ எனத் தேர்வுகளிலேயே மாணவர்கள் காலத்தைக் கடக்க வேண்டிய சூழல் உள்ளது. வெறும் மதிப்பெண்கள்தான் மாணவர்களின் கற்றல் திறனுக்கு அளவுகோலாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் இவ்விஷயத்தை செல்வசிதம்பரம் வேறுமாதிரி கையாளுகிறார்.
ஆங்கிலத்தில் Blooming என்பார்கள். அப்படி என்றால் மலர்தல் என்று அர்த்தம். ஒரு மாணவரின் கற்றல்திறன் 1ஆம் வகுப்பில் குறைவாக இருக்கும். ஐந்து வகுப்பில் கொஞ்சம் சரியாகத் தொடங்கும். அதேநிலை 10ஆம் வகுப்பில் சிறப்பாக இருக்கும். அப்போது மாணவரின் கற்றல் மலர்ந்துள்ளது என்று பொருள்.
அதைத்தான் செல்வசிதம்பரம் கூறுகிறார். அதில், ''மாணவர்களின் திறமையை அறிந்து அவர்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அந்த வகையில் அவர்களை ஊக்கப்படுத்தி புதிய முயற்சிகள் படைப்பதற்கான வழிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பேன்.
கல்வி என்பது வெறும் தேர்வு எழுதி மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்வி செல்வது மட்டுமல்ல; மாணவர்களின் தனித்திறமையை ஊக்குவித்து அவர்களை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வது. இதுதான் உண்மையான கல்வி. 10ஆம் வகுப்பு வரையிலும் சரியாகப் படிக்காத மாணவர், அதன்பின்னர் சிறப்பாகப் படித்து வாழ்க்கையில் பெரிதாக வருவார். அதற்கான நம்பிக்கையை நாம் அளிக்க வேண்டும்'' என்கிறார்.
முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் செல்வசிதம்பரம் பணியாற்றத் தொடங்கியதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் புத்தாக்க அறிவியல் விருதுகளை அந்தப் பள்ளியின் மாணவர்கள் வென்றுள்ளார்கள்.
இந்த விருதுகள் எளிய மனிதர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள். எளிய முறையில் செங்கல் அறுக்கும் இயந்திரம், எளிய முறையில் நாற்று நடும் இயந்திரம் என மாணவர்கள் கண்டுபிடிக்க, அவர்களின் திறனை அடையாளம் கண்டுள்ளார் செல்வசிதம்பரம்.
மாணவர்களின் திறனை அடையாளம் கண்டு அவர்களை அடுத்தநிலைக்கு கொண்டுசெல்வது எனது முதன்மையான குறிக்கோள் எனப் பேசி முடித்தார்.
இந்த உலகம் ஆசிரியர்களால் ஆனது. ஒரு சமூகம் முன்னேற்றப் பாதையில் சென்றால் அங்கு ஆசிரியர்கள் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்று பொருள். நல்லாசிரியர் விருது பெற்ற செல்வசிதம்பரத்திற்கு வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்.
ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்!
இதையும் படிங்க:‘ஆதலால் காதல் செய்வீர்’ - காதலும்; காதலர் தினமும்!