கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, திருவாரூர் மாவட்டம், நீலகுடியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த அனைத்து கல்வி ஆண்டு மாணவர்களுக்குமான பருவத் தேர்வுகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வருகிற ஜூலை ஒன்றாம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில் தற்போது அனைத்துக் கல்வி ஆண்டு மாணவர்களுக்குமான பருவத் தேர்வுகளும் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ரகுபதி அறிவித்துள்ளார்.
அக மதிப்பீடு மதிப்பெண் அடிப்படையிலேயே இன்ன பிற பல்கலைக்கழகங்கள் இறுதித் தேர்வு முடிவுகளை வெளிட்டு வந்த நிலையில், அவ்வாறே தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்திலும் தேர்வு முடிவுகளை வெளியிட கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில், அக மதிப்பீடு மதிப்பெண்கள் அடிப்படையிலும், இதற்கு முன்னர் நடைபெற்ற பருவத் தேர்வுகளில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களைக் கணக்கில் கொண்டும் இந்தப் பருவத் தேர்வில் தேர்ச்சி முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் வழங்கக்கோரி போராட்டம்!