திருவாரூர் மாவட்டம் தென்கால் பகுதியில் தினக்கூலி தொழிலாளர்கள் குடும்பத்துடன் சாலையோரத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தனர். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் நாகை தேசிய நெடுஞ்சாலை பணிக்காக நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் அவர்களிடம் மாற்று இடம் தருவதாக கூறி அங்கிருந்து அகற்றினர்.
அதன்படி அவர்களுக்கு அம்மா நகர் என்ற இடத்தில் கருவேல மரக் காடுகளின் நடுவில் இடம் வழங்கப்பட்டது. ஆனால், அங்கு மின்சார வசதி இல்லாத சூழலிலும், குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் மாதவி தெரிவித்ததாவது, "நாங்கள் இதற்கு முன்பு பாரத் கல்லூரி அருகே குடியிருந்து வந்தோம். அம்மா நகருக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது.
மின்சார வசதி கேட்டு மாவட்ட அலுவலகங்களில் பலமுறை மனு அளித்துள்ளோம். இதுவரை மாவட்ட அலுவலர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரசால் நாங்கள் நடுத்தெருவில் நிற்கிறோம். எனவே எங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றை மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளோம்" என்றார்.
இதே பகுதியில் வசிக்கும் அகிலா கூறுகையில், "தென்கால் பகுதியில் இருந்து அம்மா நகர் வந்த நாள் முதல் மின்சார வசதி இல்லை. இங்கு பாம்பு தொல்லை அதிகமாக இருப்பதால் குழந்தைகளுடன் நாங்கள் தவித்து வருகிறோம். இப்பகுதியில் படிக்கும் மாணவர்கள் அதிகளவில் உள்ளதால் மின்சார வசதி கண்டிப்பாக வேண்டும்" என்றார்.
முதியவர் வீராசாமி பேசுகையில், "அம்மா நகருக்கு வந்து நாங்கள் 10 ஆண்டுகள் சென்றுவிட்டது. இன்றுவரை மாவட்ட அலுவலர்கள் மின்சார வசதி செய்து தரவில்லை. சென்ற கஜா புயலின்போது அமைச்சர்கள் வந்து பார்த்துச் சென்றனர். ஆனால், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறு குழந்தைகளுடன் மின்சார வசதி இல்லாமல் தவிக்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: கரோனாவால் அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோ ஓட்டுநர்கள்