தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுத்து வரும் நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலும் தொற்றின் வீரியம் அதிகம் இருப்பதாலும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் கரோனா தொற்றைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
இருந்தும்தொற்றின் வேகம் குறையாததால் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கினை அமல்படுத்தியுள்ளது.
கரோனா தொற்று தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் மட்டுமே பரவி வந்த நிலையில், தற்போது அதனுடைய வேகம் அதிகரித்து கிராமப்புறங்களிலும் தொடர்ந்து பரவிக் கொண்டே வருகிறது.
இதனால் கிராமப்புறங்களில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கிராமப்புறங்களைப் பொறுத்தவரை, மக்கள் அனைவரும் கரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்வதில் விழிப்புணர்வு இல்லாமல் இருந்து வருவதால் தான், தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து பேசிய சமூக ஆர்வலர்கள்;
'தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களிலும் அதிகளவில் தொற்று பரவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் கிராம மக்கள் சரியான விழிப்புணர்வில்லாமல், பரிசோதனை செய்து கொள்ளாமல் இருக்கின்றனர். கிராம மக்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று மளிகைப் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வரும்போது, எதிர்பாராத விதமாக தொற்றுப் பரவி வருவதால் கிராமங்களிலும் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
மேலும் கிராமப் பகுதிகளில் கரோனா தொற்று பரிசோதனை மையம் இல்லாததால், மக்கள் நீண்ட தூரம் சென்று பரிசோதனை செய்து கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் போக்குவரத்து இல்லாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து மக்களின் உயிரைக் கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் தற்காலிக கரோனா தொற்று பரிசோதனை மையம் அமைத்துத் தர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:சரக்கு வாகனம் ஏற்றி பெண் கொலை; நான்கு பேர் கைது!