தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 144 தடை உத்தரவு அமலில் இருந்துவரும் நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கின்போது பல்வேறு தொழில்களுக்கு தமிழ்நாடு அரசு விலக்கு அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, ஒரு சில நிபந்தனைகளுடன் ஆட்டோவை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது, ஒரு ஆட்டோவில் ஒரு நபர் மட்டுமே பயணிக்க வேண்டும். அதில் பயணிப்பவர் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்; கிருமிநாசினி வைத்துக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஆட்டோ ஓட்டுநர்களும் அரசின் அறிவுரைகளை ஏற்று, ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர்.
ஆனால், தமிழ்நாடு அரசு கடும்கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.
இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகையில், 'தமிழ்நாடு அரசு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் ஆட்டோக்களை இயக்கலாம் என கூறியது மகிழ்ச்சியை கொடுத்தாலும்; ஒருபுறம் வருத்தமளிக்கிறது.
ஒரு நபருடன் எப்படி ஆட்டோக்களை இயக்க முடியும். டீசல் விலை எங்களுக்கு கட்டுப்படியாகாது. அதேபோல் ஒரு நபர்கள் ஆட்டோவில் ஏறுவதில்லை. கணவன்- மனைவி இருவரும் இருக்கும்போது, ஒரு நபரை மட்டும் எப்படி ஏற்றிச் செல்ல முடியும்.
இதனால் தமிழ்நாடு அரசு இரண்டு நபர்களை ஏற்றிக் கொள்ள அனுமதி அளித்தால், ஊரடங்கால் முடங்கியபோது வருமானம் இழந்து தவித்து வந்த நிலையில், ஓரளவு எங்களுக்கு வருமானம் கிடைக்கும்' என்று கூறுகின்றனர்.
மேலும் தமிழ்நாடு அரசு அறிவித்த ரூ.2 ஆயிரம் பணமும் தங்களுக்கு வந்து சேரவில்லை எனவும்; தங்களுக்கு நிவாரணமாக ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசுக்கு விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற கூட்டுத்தொடர் குறித்து வெங்கையா நாயுடு ஆலோசனை