திருவாரூர் அருகே உள்ள கெளஜியா நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றிவருகிறார். இவருடைய மனைவி குடியா (37). கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பால்ராஜுக்கும் குடியாவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பால்ராஜ் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து மனைவியைத் தாக்கியுள்ளார்.
அப்போது குடியா அலறல் சத்தம் எழுப்பவே அக்கம்பக்கத்தினர் வந்து படுகாயமடைந்த குடியாவை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். பின் இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
இந்தத் தகவலையடுத்து திருவாரூர் தாலுகா காவல் துறையினர் மருத்துவமனைக்குச் சென்று குடியாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பால்ராஜுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அதனைத் தட்டிக் கேட்டதால் தன்னை கட்டையால் தாக்கியதாகவும் புகார் தெரிவிக்கும் குடியா, பால்ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, திருவாரூர் தாலுகா காவல் துறையினர் பால்ராஜ் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, பெண்களை கொடூரமாகத் தாக்குதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: தொந்தரவு தாங்க முடியல - நள்ளிரவில் வீதிக்கு வந்த மூதாட்டிக்கு உதவிய காவலர்