திருவாரூர் அருகே நீலக்குடி கிராமத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஏ.பி. தாஸ் என்பவர் பதவி வகித்துவந்தார். இவரின் பதவிக்காலம் நேற்றுடன் (ஆகஸ்ட் 5) நிறைவடைந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் இடைக்கால துணைவேந்தராக பேராசிரியர் கற்பக குமாரவேல் (பொறுப்பு) பதவியேற்றுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை நடத்தப்பட்ட நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு முன்னதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியுள்ள கற்பக குமாரவேல், தற்போது மனிதவள மேம்பாட்டு மையத்தின் இயக்குநராகவும், யுஜிசி ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றிவருகிறார்.
”ஜனநாயக வழியிலேயே எனது நிர்வாகப் பணி இருக்கும். நடுநிலைமையுடன் மத்திய பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியை அதிகரிக்க அனைத்து வகையான முயற்சிகளையும் எடுப்பேன்” என பேராசிரியர் கற்பக குமாரவேல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீரின் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்