தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிப்படைந்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வரும் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கின் போது டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்படும் என்கிற அறிவிப்பைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள குமார மங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்று(மே.8) மதுப்பிரியர்கள் குவிந்தனர்.
சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி செல்லும் மதுப்பிரியர்களால், கரோனா தொற்று மேலும் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதிகளிலிருந்து மதுப்பிரியர்கள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே புதுச்சேரி மாநிலத்தில் கரோனா அச்சம் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர்.