திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் குடவாசல் தாலுகாவில் பாக்கம் என்கின்ற கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் விவசாய கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்துவருகின்றனர்.
இப்பகுதி மக்கள் கடந்த 40 ஆண்டுகளாகச் சாலை வசதி இல்லாததால் தங்கள் பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். மேலும் நகர் பகுதிக்குச் செல்ல வேண்டுமென்றால் 20 முதல் 30 கிலோ மீட்டர் வரை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறுகின்றனர். இந்தக் காரணங்களால் தங்கள் பகுதிக்கும் நகர் பகுதிக்கும் உள்ள வெட்டாற்றை பயன்படுத்திவந்தனர். வெட்டாற்றில் தண்ணீர் இல்லாததால் இந்தப் பாதையை பயன்படுத்த மக்கள் மழைக்காலங்களில் சிரமப்பட்டுவரும் நிலையில் உள்ளது.
தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்த காரணத்தால் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. இதனால் நகர் பகுதிக்கு அவசரகதியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் ஆற்றில் தோணி அமைத்து அதன் வாயிலாக ஆற்றைக் கடந்துசெல்கின்றனர். இந்தத் தோணியை பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் என அனைவரும் பயன்படுத்திவருகின்றனர்.
அவசர சிகிச்சைக்காக சாலை வழியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்றால் தொலைதூரம் சுற்றிச் செல்ல வேண்டும். அச்சமயத்தில் இந்தத் தோணி வழியாகவே மருத்துவமனைக்குச் சென்றுவருவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மருத்துவமனைக்கு விரைந்துசெல்ல முடியாததால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ், சமையல் எரிவாயு என தங்களை வந்தடைய வேண்டிய சேவைகள் சரிவர கிடைக்காமல் சிரமப்பட்டுவருவதாகவும், இதனால் ஒரு சிலர் வேலை காரணமாக, தங்கள் குழந்தைகள் எதிர்காலத்திற்காக இப்பகுதியை காலி செய்து அருகில் உள்ள கிராமத்தில் குடியேறி உள்ளதாகவும் கூறுகின்றனர். ஒரு சிலர் ஆபத்து பயணத்தை தவிர்ப்பதற்காகத் தங்கள் குழந்தைகளை விடுதியில் சேர்த்துவிடுகின்றனர்.
இப்பகுதி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல எந்தவித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி ஆபத்தான முறையில் இந்த ஆற்றில் பயணத்தை மேற்கொண்டுவருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை எந்தவித பலனும் இல்லை என்று கூறும் இப்பகுதி மக்கள் தமிழ்நாடு அரசு இப்பிரச்னையில் தலையிட்டு வெட்டாற்றின் குறுக்கே நடைபாலம் அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: செலவைக் குறைக்கும் முயற்சியில் "காக்னிசென்ட்" - ஏழாயிரம் ஐடி ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து!