திருவாரூர் மாவட்டத்தில் பிரதான தொழில் வேளாண்மை. மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 36 ஏக்கர் குறுவை சாகுபடியின் அறுவடைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. உழவர் நெல் மூட்டைகளை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேரடியாக விற்பனை செய்துவருவது வழக்கம்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உழவர் நெல் மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கிவைப்பதற்கு முன்பு ஆன்லைன் மூலம் பதிவுசெய்த பிறகே கொள்முதல்செய்யப்படும் என அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் உழவர் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்து உழவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் 80 விழுக்காடு விவசாயிகள் சிறு, குறு விவசாயிகள்தாம். நாங்கள் சாகுபடி செய்து அறுவடைசெய்த நெல் மூட்டைகளை நேரடியாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கிவைத்து விற்பனை செய்துவந்தோம்.
ஆனால் தமிழ்நாடு அரசு ஆன்லைன் பதிவுசெய்த பிறகு நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய முடியும் எனக் கூறுவது ஏற்புடையதாக இல்லை. காரணம் சிறு, குறு உழவரிடம் ஆண்ராய்டு கைப்பேசி இருப்பது என்பது சாத்தியமில்லை. ஆன்லைன் பதிவுசெய்வது எப்படி என்பதும் அவர்களுக்குப் புரியாது. இ-சேவை மையத்திற்குச் சென்றாலும் காலதாமதம் ஆகும்.
அவ்வாறு பதிவுசெய்து பதிவுச்சீட்டு பெறும் வரை வீட்டில் நெல் மூட்டைகளை அடுக்கிவைத்து காத்திருக்க வேண்டும். இனி மழை காலம் என்பதால் தொடர்ந்து மழை பெய்தால் நெல்லின் ஈரப்பதம் கூடுதலாக மாறும் சூழல் உருவாகும். இதனால் உழவர் பெரும் அளவில் பாதிக்கப்படுவார்கள்" என்றனர்.
இதையும் படிங்க: 'நெல் கொள்முதல்; ஆன்லைன் பதிவு குறித்து அச்சப்படத் தேவையில்லை'