திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாகப் பல இடங்களில் தாழ்வான பகுதிகள் முழுவதும் மழைநீர் வடியாமல் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. பின்னர் அங்குள்ள மக்களை மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்து வருகின்றது.
இந்நிலையில் நன்னிலம் அருகே உள்ள பூர்த்தாங்குடி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவரும் நிலையில் கடந்த நான்கு நாள்களாகப் பெய்துவந்த தொடர் கனமழையால் கிராமத்தின் அருகே செல்லும் இடியாற்றின் கரை உடைப்பு ஏற்பட்டது.
இதனால் வாய்க்கால்கள் முழுவதும் நீர் நிரம்பி வீடுகளுக்குள் மழைநீரும், ஆற்றுநீரும் சேர்ந்து சூழ்ந்து சுவர்கள் முழுவதும் இடிந்துள்ளதால் பொதுமக்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்துவருகின்றனர்.
மேலும், "மழைநீர் சூழ்ந்து இரண்டு நாள்கள் ஆகியும் இதுவரை எந்த ஒரு அரசு அலுவலரும் எங்கள் பகுதிகளைப் பார்வையிட வரவில்லை. அன்றாடம் உணவுக்கே குழந்தைகளை வைத்துக்கொண்டு தவித்துவருகின்றோம்" என வேதனையுடன் புலம்புகின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.
எனவே கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில்கொண்டு உடனடியாக மாவட்ட ஆட்சியர் தங்கள் பகுதிகளைப் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: திருவாரூரில் தொடர் கனமழை: அரசு அலுவலர்கள் மீது மக்கள் புகார்