திருவாரூர் சட்டப்பேரைவத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் பூண்டி கலைவாணனை ஆதரித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "இந்தியா மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வேளாண் சட்டங்கள் போன்ற ஆபத்தான சட்டங்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

டெல்லியில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராடி உயிரிழந்துள்ளனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் பாஜக அரசு மூர்க்கத்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய அரசுத் துறைகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டு வருகின்றன. விமான நிலையங்கள், பெல் நிறுவனம், ஓஎன்ஜிசி, பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்க்க மோடி அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது.
பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், தலித் மக்கள், பெண்கள் என அனைவரும் தாக்கப்படுகின்றனர். மனிதத்தன்மை அழிந்து கொண்டிருக்கின்றது. பிரதமர் நரேந்திர மோடி சூத்திரதாரராக செயல்படுகிறார். அவருக்கு இரு புறமும் பக்கபலமாக இபிஎஸூம் ஓபிஎஸூம் உள்ளனர். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தேசத்தின் அரசியல் சட்டத்தை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்" என்று தெரிவித்தார்.