திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி ஈடுபட்டு வந்தநிலையில், தற்போது அறுவடைப் பணிகள் பல்வேறு இடங்களில் நடந்துமுடிந்துள்ளன.
அடுத்த சாகுபடியான சம்பாவிற்கு விவசாயிகள் தயாராகி வரும் நிலையில், சம்பாவிற்கான விதை மானியத்தை உடனடியாக அறிவிக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பேசிய விவசாயிகள், இந்தாண்டு குறுவை சாகுபடி விதைகளுக்கான மானியத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலயைில், விதை மானியம் குறுவை சாகுபடி முடியும் தருவாயில்தான் தரப்பட்டது. இதனால், பலர் பயன் பெறமுடியாமல் போனது.
தற்போது, சம்பா சாகுபடிரக்கான பணிகள் தொடங்கி நடைபெற்றுவரும் நேரத்தில் சம்பாவிற்கான விதை மானியத்தை அறிவித்து வழங்கினால் 100 விழுக்காடு விவசாயிகள் பயனடைவார்கள். காலம் தாழ்த்தினால், எந்த ஒரு பலனும் இல்லாமல் போய்விடும்.
தரமான விதைகளை அரசு வழங்கவேண்டும். தனியாரிடம் விதைகளை பெற்றுச் செல்லும் நிலை தொடர்ந்து நீடித்து வருகின்றது. தமிழ்நாடு அரசு விவசாயிகளின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு சம்பாவிற்கான மானியத்தை உடனே அறிவித்து தரமான விதைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'குடிக்கும் தண்ணீரில் சாக்கடை நீர்' - 15 ஆண்டு கால அவலம்