திருவாரூர் மாவட்டம் பேரளம் பேரூராட்சிக்குட்பட்ட புதுத்தெருவில் தனியாருக்குச் சொந்தமான மூன்று கட்டடங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அப்பகுதி வாசிகள் பயன்படுத்திய கழிவுநீர் முழுவதும் கட்டடத்தின் பின்புறம் வெட்டவெளியில் திறந்து விடப்படுகிறது. இப்பகுதியின் பின்புறம் வேளாண் துறை விரிவாக்க மையம், கால்நடை மருத்துவமனை, கனரா வங்கி மற்றும் ஆதிதிராவிட நலத்துறை மாணவர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகள் உள்ளன.
குளம்போல் தேங்கி நிற்கும் கழிவு நீர்
இந்தக் கழிவு நீர் முழுவதும் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதி எதிரில் குளம் போல் தேங்கி நிற்பதால், விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு மலேரியா, டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மூக்கை பிடித்து கொண்டு பணிபுரியும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நோய் பரவும் அபாயம்
இது குறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலை நீடித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் கவனத்தில் எடுத்து குளம் போல் தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'தொற்று குறைந்ததால் தான் அரசியல் பரப்புரைக்கு அனுமதி' - அமைச்சர் விஜயபாஸ்கர்