புரெவி புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் பல்வேறு கிராமங்களுக்குள் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களை மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு அலுவலர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நன்னிலம் அருகே கந்தங்குடி கிராமத்தின் வழியாக செல்லக்கூடிய வெட்டாற்றில் உடைப்பு ஏற்பட்டு கந்தன்குடி கிராமத்தின் நான்கு புறமும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் கிராமத்தில் வசித்து வரும் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குழந்தைகளை வைத்து கொண்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.
![உணவில்லாமல் தவிக்கும் கிராம மக்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvr-01-rain-village-flood-vis-script-byte-tn10029_10122020084820_1012f_00136_657.jpg)
கடந்த நான்கு நாள்களுக்கும் மேலாக வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் மக்கள் உணவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் திக்கற்ற நிலையில் இருக்கின்றனர்.
மூன்றில் ஒருவேளை கிடைத்தாலும் மகிழ்ச்சிதான், குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் கவலைக்குரிய நிலையில் இருக்கிறோம். மழைநீர் வீட்டை சுற்றி தேங்கி கிடப்பதால், இரவு நேரத்தில் கொசு தொல்லை அதிகரித்துள்ளது.
பாம்போ, பூச்சியோ வந்து கடித்தால் உயிர் போகும் நிலையில் தான் இருக்கிறோம். மிகவும் அச்சத்தோடு வாழ்கிறோம் என கந்தகுடி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது வரை எந்த ஒரு அரசு அலுவலர்களோ, ஊராட்சி மன்ற தலைவரோ வந்து தங்கள் பகுதிகளை பார்வையிட்டு உதவி செய்ய முன்வரவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் இதனை கவனத்தில் ஏற்று தங்கள் பகுதியை பார்வையிட்டு, அத்தியாவசிய பொருள்களை உணவு மற்றும் குழந்தைகளுக்கு பால் உள்ளிட்டவைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 11ஆம் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய முதலமைச்சர்!