திருவாரூர் : பேரளத்தை அடுத்த வேலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (65). இவரின் மனைவி இறந்துவிட்டதால் தனது இரு மகன்களோடு வாழ்ந்துவருகிறார். இவருடைய மூத்த மகன் வெளிநாட்டில் வேலை செய்துவரும் நிலையில் இளைய மகன் செல்வகுமார் (23) கோயம்புத்தூரில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு வந்த செல்வகுமார் ஊரடங்கு தளர்வு என்பதால் மீண்டும் வேலைக்கு செல்ல ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த தந்தை பன்னீர்செல்வம் தனக்கு வயதாகிவிட்டது. தனியாக இருப்பதால், தான் வேலை பார்க்கும் மர பட்டறையில் வேலை பார்த்துக்கொண்டு தன்னோடு இருக்க வற்புறுத்தி கண்டித்துள்ளார்.
தூக்கிட்டு தற்கொலை
இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து பன்னீர்செல்வம் மர பட்டறை வேலைக்கு சென்றுள்ளார். இதனிடையே வேலைக்கு வெளியூருக்கு போகவேண்டாம் என தந்தை திட்டியதால் மனமுடைந்த செல்வகுமார் வீட்டிற்கு அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து அறிந்த பேரளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவால் சோகமே மயமான தமிழ்நாடு மீனவர்கள்