திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கடகம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். கடந்த 1980இல் அப்போதைய நன்னிலம் சட்டப்பேரவை உறுப்பினர் கலையரசன் பொதுமக்களுக்காக சிறிய கான்கிரீட் பாலம் அமைத்துக் கொடுத்தார்.
இந்தப் பாலமானது தற்போது சேதமடைந்துள்ளது. சிறிய பாலம் என்பதால் ஏற்கனவே இந்தப் பாலத்தை கட்டியும் பயனில்லை. இப்போது பாலம் சேதமடைந்துள்ளதால் அவ்வழியாகச் செல்லவே கிராமத்தினர் அச்சப்படுகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் தெரிவித்ததாவது, "எங்கள் கிராமத்திற்கு 1980இல் கட்டி கொடுக்கப்பட்ட பாலமானது 40 வருடங்களை கடந்துள்ளதால் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இருசக்கர வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்குப் பாலம் உள்ளதால் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கான வாய்ப்பு இல்லை.
கிராமத்தில் விவசாயத்தை நம்பித்தான் வாழ்ந்துவருகிறோம். விவசாய பணியின்போது நெல் மூட்டைகளையும், நாற்றுகளையும் ஏற்றி வரும்போதும் டிராக்டர் செல்லமுடியாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றோம்.
இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் நாளுக்கு நாள் பாலம் சேதமடைந்துவருகிறது. ஆகவே மாற்று பாலம் உடனடியாக அமைத்து தர வேண்டும்" என்றனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை!