திருவாரூர்: கூத்தாநல்லூர் அருகேயுள்ள கருப்பூர், மேலமணலி, உள்ளிட்ட பகுதிகளில் நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் இன்று நேரில் சென்று ஆய்வுசெய்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 89,232 ஹெக்டேர் நிலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 35ஆயிரத்து 590 விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்துள்ளனர். அவர்களுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.
![minister kamaraj thiruvarur visit](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvr-02-paddy-damage-minister-inspection-vis-script-byte-tn10029_10122020165432_1012f_02022_315.jpg)
டெல்டா பகுதிகளில் முதலமைச்சரின் சுற்றுப்பயணம், அப்பகுதி மக்களின் அச்சத்தைப் போக்கியிருக்கின்றது. புரெவி, நிவர் புயலாலும், அதனூடே பெய்த கனமழையால் வீடுகளை இழந்த மக்களுக்கும், கால்நடைகள் இழப்புக்கும், சேதமடைந்த நெற்பயிர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய ஆய்வு குழுவும் பயிர் சேதங்கள் குறித்து ஆய்வுசெய்து வருகிறது. அவர்களிடம் உரிய நிவாரணம் வழங்க கோரி கேட்டுப் பெற்று பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நேரத்தில் நிவாரணம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் அச்சம் கொள்ள தேவையில்லை” என்று கூறினார்.