திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் 'நிவர் புயல்' முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் காமராஜ் அலுவலர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நிவர் புயலை எதிர்கொள்ள மாவட்டத்தில் அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் 115 அலுவலர்கள் அடங்கிய 10 வெள்ளத்தடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுகாதாரத்துறை, நோய்த்தடுப்புத் துறைகளைச் சேர்ந்த 48 அலுவலர்கள் அடங்கிய 12 மருத்துவக் குழுக்களும், 52 கால்நடை மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளன. உணவு வழங்க 689 அலுவலர்கள் அடங்கிய 151 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. பொதுப்பணித்துறை சார்பில் 26,495 மணல் மூட்டைகளும் ஒரு லட்சம் காலி சாக்குகளும் தயார் நிலையில் உள்ளன.
212 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு, 249 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர உதவிக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலத்தில் உள்ள 04366-1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.
இதையும் படிங்க: நிவர் புயல்: 13 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்