திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் துறையினர், மருத்துவர்கள், செவிலியர் ஆகியோருக்கு தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருள்கள் நியாயவிலைக் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் சிலர், பணம் கொடுத்து ரேஷன் பொருள்களை வாங்கியுள்ளனர். இவர்கள் வாங்கிய பொருள்களுக்கான பணத்தைத் திருப்பி அளிப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். இம்மாதத்திற்கான ரேஷன் பொருள்களைப் பெறுவதற்கான டோக்கன் மக்களிடம், அவர்களது வீடுகளுக்குச் சென்றே வழங்கப்படும்.
மாநிலத்தில் நடைபெறும் ஒரு சில சம்பவங்களை வைத்து காவல் துறையைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. காவல்துறை சிறப்பாகச் செயல்படவில்லை என கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்திருக்கிறார். நமது காவல் துறை ஸ்காட்லாந்து காவல் துறைக்கு இணையானது என்பதை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறிவருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் தினமும் ஒரு செய்தியை வெளியிட வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார். தமிழ்நாடு அரசு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதுகாப்பதில் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுவதற்காகப் பேசிவருகிறார்" எனக் கூறினார்.