மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஒன்பது தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெற்றது.
இந்நிலையில், தங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு அதிமுக வேட்பாளர்கள் நன்றி தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக சார்பில் நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட சரவணன், திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட ஜீவானந்தம் ஆகிய இருவருக்கும் வாக்களித்த வாக்காளர்களுக்கு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் திருவாரூர் நகர்ப்பகுதிகளில் வாகனப் பேரணியாக சென்று நன்றி தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், "தேர்தல் நேரத்தில் மத்தியில் மோடி அரசும், மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி அரசும் நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை மக்களிடம் வைத்தோம். தற்போது அதில் வெற்றி கண்டுள்ளோம்.
திமுக சில மக்களவை உறுப்பினர்களை பெற்றதன் காரணமாக அதிமுக அழிந்துவிடும் என சிலர் எண்ணுகின்றனர். அதிமுகவை எந்த காலத்திலும் எவராலும் ஒன்றும் செய்ய முடியாது. ஆறு மாதத்தில் அதிமுக வீறுகொண்டு எழப் போகிறது" என்றார்.