குளிரூட்டியின் இதத்தினை அனுபவத்துக் கொண்டு, ஜன்னலில்லா அறைகளுக்குள் வேலைப்பார்க்கும் ஊழியர்களுக்கு இந்த ஊரடங்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கலாம். ஆனால், வெயிலையும், மண்ணையும் மூலதனமாக்கும் மண்பாண்டத் தொழிலில் இது சாத்தியமில்லை. தனி நபர் இடைவெளியுடன் பானைகளைத் தயாரித்தாலும்கூட அதனை யார் வாங்குவார்கள் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் கடாரம்கொண்டான், முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகம், மன்னார்குடி அருகேயுள்ள கானூர் ராயபுரம் தென்கரை, வடகரை, உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர் குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். கரோனா நெருக்கடியால், இவர்களின் மண்பாண்டத் தயாரிப்பு சக்கரம் தன் வேகத்தைக் குறைத்துள்ளது.
கோயில் திருவிழாக்கள் பங்குனி, சித்திரை மாதங்களில் அதிக அளவில் நடைபெறும். நேர்த்திக் கடனை நிறைவேற்ற ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுப்பார்கள். இதற்காக, மண்ணால் செய்யப்பட்ட சட்டிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படும். தற்போது, கூட்டமாக பங்கேற்கும் நிகழ்வுகள் தடை செய்யப்பட்டதால், மிகப்பெரிய பொருளாதார அடி அவர்கள் மேல் விழுந்துள்ளது.
இதுவரை வீட்டில் தயாரித்து வைக்கப்பட்ட மண்பானைகள், கோயில் கும்பாபிஷேகத்திற்கான கலயங்கள், திருமண விழாக்களுக்கான அரசாணை பானைகள் உட்பட அகல் விளக்கு உண்டியல் பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு மண்பாண்டங்கள் வெயிலில் வீணாகி விற்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர் கூறுகையில், “வழக்கமாக கோடைக் காலத்தில் தண்ணீர் பானை விற்பனை அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கோயில் திருவிழாக்களின்போது பஞ்சாமிர்தம் தயாரிக்க பானைகளை வாங்கி செல்வார்கள். விரதமிருந்து அக்னி சட்டி எடுக்க களிமண்ணால் ஆன சட்டிகளை பக்தர்கள் வாங்கி செல்வார்கள். கும்பாபிஷேகத்தின்போது மண் கலசங்கள் அதிகளவில் வாங்கப்படும். தற்போது, கோயில்கள் அடைக்கப்பட்டு திருவிழாக்கள், கும்பாபிஷேகம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மண்பாண்டங்கள் அனைத்தும் தேங்கியுள்ளன” என்றார்.
அரசின் உதவி போதுமானதா?
அரசு வழங்கிய ஆயிரம் ரூபாய், அத்தியாவசிய பொருள்கள் குறைந்த நாள்களே வரும். தொடர்ந்து பொருளாதார இழப்பை சந்தித்துவருவதால், எதிர்காலம் குறித்து அச்சத்தில் இருக்கிறோம்.
அகல் விளக்குகள், திருஷ்டி பொம்மைகள், உண்டியல் என ஆயிரக்கணக்கில் தயாரித்து வைத்துவிட்டு, வாங்க ஆளில்லாமல் தவிக்கிறோம். அனைத்தும் அதிக அளவிலான வெயிலின் தாக்கம் காரணமாக அவை தெறிப்புவிட தொடங்கிவிட்டன.
இதனால் பொருள்கள் செய்வதற்கான செலவு, தொழிலாளர்களுக்கான ஊதியம் என ஆயிரக்கணக்கில் நஷ்டத்தைச் சந்திக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். மண்பாண்ட தொழிலாளர்களின் நிலையை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு உதவ வேண்டுமென அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி!