திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருக்களம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாதேவன்(35). இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு தீரன் என்ற 2 வயது மகன் உள்ளார். இந்நிலையில், இவருக்கு கடந்த 24ஆம் தேதி குடவாசல் அரசு மருத்துவமனையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.

அப்போது பவித்ராக்கு ரத்தப்போக்கு அதிகமாக உள்ளது எனக்கூறி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலையில், கருத்தடை ஊசி போட்டதாகவும் இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே மயக்கம் அடைந்ததாகவும் இதுபற்றி மருத்துவர்களுக்கு தெரியப்படுத்தியும் மருத்துவர்கள் சரியான சிகிச்சை அளிக்காத காரணத்தால் பவித்ரா உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனை முன்பு பவித்ராவின் மரணத்திற்கு காரணம் தவறான சிகிச்சை எனக் கூறி பிறந்த கை குழந்தையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
