தமிழ்நாடு அரசின் 2020-21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யவுள்ளார். அதிமுக அரசின் ஐந்தாண்டு கால ஆட்சியில் தாக்கல் செய்யப்படவுள்ள கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும்.
மேலும் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதனை மனதில் வைத்து இந்த பட்ஜெட்டில் மக்களின் பல்வேறு தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுவருகிறது. இதனால் நாளைய பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு கவர்ச்சிகரமான அறிவிப்புகள், துறைரீதியான அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் என பல்வேறு விஷயங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாகக் கொண்டிருக்கும் டெல்டா பகுதி மக்கள் இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து காத்திருக்கின்றனர். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி காவிரி டெல்டா பகுதிக்கு என தனிச் சட்டம் இயற்றி அதற்கான நிதியை ஒதுக்க வேண்டும் என்பதை விவசாயிகள் பிரதான கோரிக்கையாக முன் வைக்கின்றனர்.
மேலும், விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான நெல் குவிண்டாலுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.2500 நிர்ணயம் செய்யப்பட வேண்டும். வேளாண்மை விளை பொருட்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலை கிடைக்க வேண்டும். இந்தாண்டு இயந்திர தட்டுப்பாடு காரணமாக சம்பா சாகுபடிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, போதியளவு உழவு இயந்திரங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
விதைநெல் தட்டுப்பாட்டைப் போக்கவேண்டும். குடிமராமத்து பணிகளை அப்பகுதி விவசாயிகளை கொண்டு மட்டுமே செயல்படுத்த வேண்டும். ஆறுகள் குளங்கள் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்த வேண்டும். நிர் மேலாண்மையில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், கடந்தாண்டு விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியே முறையாக வந்தடையவில்லை. எனவே விவசாயத்திற்கு என ஒதுக்கப்படும் நிதியை கடைக்கோடி விவசாயிக்கும் சென்றடையும் வகையில் இந்த ஆண்டு வழிவகை செய்ய வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: 'இன்று பறந்தவர்கள், இன்னும் பல விமானங்களில் பறப்பார்கள்' - அரசுப்பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்திய சூர்யா