இது தொடர்பாக தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில், “ புரெவி புயல் காரணமாக கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரையி மூன்று நாட்களாக இடைவிடாது மழை பெய்து, பெரும் சேதத்தை விளைவித்து வருகிறது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் பத்து லட்சம் ஏக்கர் மாநிலம் முழுவதிலும் 25 லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் முழுமையும் மழை நீரால் சூழப்பட்டு அழுகத் தொடங்கியிருக்கிறது. கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர் வகைகள் சாய்ந்து அழிய தொடங்கி இருக்கிறது.
கரோனா தாக்குதலால் பல இன்னல்களுக்கு ஆட்பட்ட விவசாயிகள் தற்போது புயல் மழையால் பேரழிவை சந்தித்து வருகின்றனர். தமிழக அரசு உயர்மட்ட குழுவை அனுப்பி வைத்து பாதிப்பு குறித்து ஆய்வு செய்திட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள நெல் பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 30,000 இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும் தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களின் பாதிப்பிற்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும்.
இடிமின்னல் மற்றும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், வீடுகளை இழந்தவர்களுக்கு கூரை வீடு ஒன்றுக்கு ரூ.20 ஆயிரமும், ஓட்டு வீடு ஒன்றுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும். பேரிடரில் இருந்து விவசாயிகளை பாதுகாப்பதற்கும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக முதற்கட்டமாக விடுவிக்க வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மழைநீருடன் கலந்த கழிவுநீர் - மக்கள் கடும் அவதி!