திருவாரூர்: அமெரிக்காவில் உள்ள நியூயார்க் ராக்சஸ்டர் பல்கலைக்கழகத்தில் இந்துத்துவப் பேராசிரியராக உள்ள டாக்டர் டக்ளஸ் புருக்ஸ் தலைமையில், சுமார் 22 நபர்கள் கொண்ட குழு, இந்துத்துவம் குறித்து அறிந்து கொள்வதற்கும், இந்து கோயில்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கும் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த பயணத்தில் மொத்தம் 14 நாட்கள் தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களை பார்வையிட்டு, சாமி தரிசனம் செய்ய உள்ளனர். அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து சிதம்பரம், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் சாமி தரிசனம் செய்துவிட்டு, தற்போது திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சாய ரட்சை பார்ப்பதற்காக வெளிநாட்டினர் வருகை தந்தனர்.
தற்போது சென்னையிலிருந்து ஜெகநாத் பாபு என்கிற வழிகாட்டியுடன், தமிழ்நாட்டில் புகழ் பெற்ற கோயில்களில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தியாகராஜர் ரௌத்திர துர்க்கை கமலாம்பாள் ஆகிய சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக, ரௌத்திர துர்க்கை சன்னதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு அவர்கள் வெளியே வந்தவுடன், சிவனடியார் ஒருவர் தேவாரப் பாடலை அவர்கள் முன்பு பாடினார்.
கோயிலுக்கு தரிசனம் செய்ய வருகை தந்த அனைவரும் பாரம்பரிய உடையான வேட்டி புடவை அணிந்து, நெற்றியில் திருநீறும் பூசியிருந்தனர். மேலும் கமலாம்பாள் சன்னதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த அமெரிக்க நபர்களுடன், இரண்டு பெண் காவலர்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அப்போது மற்ற அமெரிக்க ஆண்களை 'நோ மேன், கோ அவே' என்று தள்ளி நிற்க சொல்லிவிட்டு, அமெரிக்க பெண்கள் அங்கிருந்த காவலர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது, சிரிப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அந்த குழு, திருவாரூரில் இருந்து பிள்ளையார்பட்டி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், மதுரை ஆகிய பகுதிகளுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டு, மீண்டும் சென்னை செல்ல உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ஜெகநாத் பாபு கூறுகையில், “திருவாரூர் மற்றும் சிதம்பரம் ஆகிய கோயில்களில்தான் இறைவனை ராஜா என்று அழைக்கின்றனர். அந்த வகையில் முதன்மையான கோயிலாகவும், சிறப்பு பெற்ற சாய்ரட்சை நடைபெறும் கோயிலாக உள்ள திருவாரூர் தியாகராஜர் கோயிலில், அமெரிக்காவைச் சேர்ந்த 22 நபர்கள் வழிபாடு நடத்தினர். மேலும், எங்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பிலும், பொதுமக்களும் நல்ல ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.
மேலும், சாமி தரிசனம் செய்வது குறித்து டாக்டர் டக்ளஸ் புரூக்ஸ் கூறுகையில், “திருவாரூர் தியாகராஜர் கோயில் தியாகராஜர் மற்றும் கமலாம்பாளை தரிசித்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது" என தமிழில் பேசினார்.