தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சாலைப் பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி 31ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திருவாரூரில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை, அரசு அலுவலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், பழைய பேருந்து நிலையத்தில் கையெழுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் பேட்டியளித்தார்.
நாட்டை அதிரவைத்த 'பீமா கோரேகான்' கலவர வழக்கின் தற்போதைய நிலை என்ன?
அப்போது, “தமிழ்நாட்டில் மக்கள் கருத்துக்களை கேட்காமல் எந்தவித திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. முதலமைச்சர் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. எனவே ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்கள் ஏற்காத எந்த திட்டத்தையும் மாநிலத்தில் நிறைவேற்ற மாட்டோம்.
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஒரு நாடக நடிகர், எங்களைப் பொறுத்தவரை நாடகம் ஆட வேண்டிய அவசியம் கிடையாது. மீத்தேன் எடுப்பதற்கு கையெழுத்துப் போட்டுவிட்டு தற்போது அதை எதிர்ப்பது போன்று ஸ்டாலின் நாடகமாடி வருகிறார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா அவர்களின் வழிகாட்டுதலோடு நடந்து வருகிறோம். எனவே தந்தை பெரியார் குறித்து தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை நடிகர் ரஜினிகாந்த் தவிர்க்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.