திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சிக்குள்பட்ட பழைய வீட்டு வசதிவாரிய குடியிருப்பு, தெப்பகுளம் வடகரை, இந்திரா நகர், நீடாமங்கலம், ரிஷியூர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றும் பணியை உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சாந்தா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், "புரெவி புயல் வலுவிழந்தாலும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்தக் கனமழை ஓரிரு நாள்கள் தொடரும் என வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. இதனடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 47 நிவாரண முகாம்கள் செயல்பட்டுவருகின்றன. இதில், 510 குடும்பத்தைச் சேர்ந்த 1,800 நபர்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முகாம்களின் அருகில் குடியிருப்பவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டுவருகிறது. இதுவரை, கணக்கெடுப்பின்படி 219 வீடுகள் பாதிப்படைந்துள்ளன. ஆடு, மாடு என 29 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இவற்றுக்கான நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சில இடங்களில் தாளடி பயிர்கள் மூழ்கியிருக்கின்றன. வடிகால் பகுதியில் தாழ்வான பகுதியில் உள்ள இடங்களில் பயிர்கள் மூழ்கியுள்ளன. அதனையும் கண்காணித்துவருகிறோம். பாதிப்புகள் இருந்தால், அவற்றைக் கணக்கெடுத்து அதற்குரிய நிவாரணம் வழங்கப்படும்.
அதிமுக வலுவான இயக்கம். அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டுவருகின்றன. மக்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்" என்றார்.
இதையும் படிங்க: மணலியை சூழ்ந்த மழைநீர்: பொதுமக்கள் அவதி!