திருவாரூர்: இரண்டு வயதில் உயிரிழந்த மகளுக்கு தந்தை கோயில் கட்டி குடமுழுக்கு நடத்திய நிலையில் ஊர்மக்கள் கூடி வழிபாடு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட புள்ளமங்கலம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தரபாண்டியன் - மஞ்சுளா தம்பதியினர். இவர்களுக்கு சபரி வாசன் என்கிற மகனும் சக்தி பிரக்யா என்கிற மகளும் இருந்துள்ளானர். சக்தி பிரக்யாவுக்கு இரண்டரை வயது இருக்கும்போது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த அவர் அருகே உள்ள குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். செல்லமாக வளர்த்த மகள் உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தில் பேரிடியாக இறங்கியுள்ளது.
அதனால் தாய் தந்தை இருவரும் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளனர். இதனையடுத்து தினந்தோறும் மகளின் நினைவுகளை மறக்க முடியாமல் தவித்து வந்த தந்தை சௌந்தரபாண்டியன், தங்களது வீட்டு பூஜை அறையில் மகளின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்து தினமும் வழிபட்டு வந்துள்ளார்.
மேலும் மகளின் நினைவு என்றும் நிலைத்து இருக்க வேண்டும் என்றால் புகைப்படம் மட்டும் போகாது என நினைத்த அவர் ஆலயம் கட்ட வேண்டும் என்று முடிவெடுத்து அதற்காக சிறுக சிறுக பணம் சேர்க்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஆலயம் கட்டும் பணியினை தனது வீட்டிற்கு அருகில் அவர் தொடங்கியுள்ளார்.
இதையும் படிங்க: "நல்லதோ, கெட்டதோ தமிழகத்தை திமுக அல்லது அதிமுக தான் ஆள வேண்டும்" - தமிமுன் அன்சாரி
மூன்று வருடமாக நடைபெற்ற ஆலய கட்டுமான பணி நிறைவடைந்த நிலையில் இன்று அதற்கான குடமுழுக்கு விழாவையும் அவர் வெகு விமர்சையாக நடத்தி இருக்கிறார். தனது மகளை அம்மனாக பாவித்து தனது குழந்தை சாயலில் அம்மன் சிலை வைத்து, ஸ்ரீ சக்தி பிரக்யா அம்மன் என்கிற பெயரில் கோயில் எழுப்பி அதற்கு அபிஷேகம் ஆராதனை செய்து குடமுழுக்கு நடத்தி உள்ளார்.
சௌந்தரபாண்டியனில் இந்த செயலை கண்டு வியந்த ஊர் மக்கள் ஒன்று கூடி இந்த ஆலய குடமுழக்கில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். அம்மன் கோயிலுக்கு குடமுழுக்கு செய்வது போன்று வேத விற்பன்னர்களை வைத்து யாகம் வளர்த்து ஆகம விதிமுறைப் படி அவர் இந்த குடமுழுக்கை நடத்தினார்.
யாகசாலை பூஜைகள் முடிந்து பூர்ணாஹதி நடைபெற்ற பின்பு புனித கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஆலயத்தை சுற்றி வந்து கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்ற குடமுழுக்கு நடைபெற்றது. இது குறித்து சௌந்தரபாண்டியன் கூறுகையில், “தனது மகள் உயிருடன் இருந்து அவளுக்கு ஒரு திருமணம் செய்தால் என்ன செலவாகும் என்பதை நினைத்து தான் இதை செய்துள்ளேன்.
எனக்கு பெண் குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும் இந்த குழந்தை எனக்கு மட்டுமல்லாமல் இந்த ஊருக்கும் நன்மை செய்யும் என்கிற நோக்கில் இந்த ஆலயத்தை கட்டி உள்ளேன். மேலும் வருடா வருடம் இந்த கோயிலுக்கு திருவிழா எடுத்து வழிபடுவேன்” என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீலகிரியில் தொடர் கனமழை: சாலை உருண்டு விழும் பாறைகள்.. பொதுமக்கள் அச்சம்..!