திருவாரூர்: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் தாலுகா, ஒட்டர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோபால்சாமி என்பவர், தனது பூர்வீக நிலத்தில் தவறான வகையில் பட்டா மாறுதல் செய்ததை தட்டி கேட்டதால், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னையால், ஜாதிய மோதல்கள் உருவாகும் நிலை ஏற்பட்டது.
பொய் வீடியோ பதிவு
உடனடியாக இதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து கோபால்சாமி மீது அவசர கதியில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தது. இது தவறான நடவடிக்கை.
விவசாயி கோபால்சாமி தனது பூர்வீக நிலத்தின் பட்டாவை வருவாய் பதிவேட்டில் மாற்றம் செய்ததை தட்டிக்கேட்ட போது, தான் செய்த தவறை மூடி மறைப்பதற்காக கோபால்சாமியை மிரட்டி அச்சுறுத்தி அடித்துவிட்டு, தன்னை அடித்ததாக பொய் வீடியோவை கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் இணைந்து இணையதளங்களில் பதிவிட்டதாக தெரியவருகிறது.
இதனடிப்படையில் இதில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர், வீடியோ பதிவு செய்த நபர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் உள்ளிட்டோர் உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிட்டு, விவசாயிகள் மத்தியில் ஜாதிய மோதல்களை உருவாக்கும் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
உண்மை நிலையை விளக்க வேண்டும்
இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்திடவேண்டும். விவசாயி கோபால்சாமி மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டப்பேரவை நடந்து வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர், இப்பிரச்னை குறித்து உண்மை நிலையை விளக்கிக் கூறி பொய் வழக்கை திரும்பப் பெறுவதோடு, வருவாய் ஊழியர்களை பணி நீக்கம் செய்து எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு தீர்வுகாண முன்வர வேண்டும்.
தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் தவறான வகையில் நில வருவாய் பதிவேடுகளில் மாற்றம் செய்வதை தடுத்து நிறுத்த உயர்மட்ட குழுவை தமிழ்நாடு அரசு அறிவித்து பிரச்னைகளுக்கு தீர்வு காணுவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
சிக்கல்கள்
1984-இல் எஸ்டி சோமசுந்தரம் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தபோது நில உடமைப்பதிவேடுகள் அன்றைய நிலைக்கு பதிவேற்றம் செய்யப்பட்டது. அதற்கு பிறகு இதுவரையிலும் அதேநிலை தொடர்வதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
உடனடியாக வருவாய் நில உடமைப் பதிவேடுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தி இன்றைய நிலைக்கு கணினியில் பதிவேற்றம் செய்திட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: கே.டி.ராகவன் மீது மீண்டும் ஒரு குற்றச்சாட்டு - காவல்நியைலத்தில் புகார்