திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதிகளிலுள்ள சந்திரசேகரபுரம் உள்ளிட்ட இடங்களில் அரிசி, ஆயில், மளிகைப் பொருள்கள் அடங்கிய 16 வகையான பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை ஒரு லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தனது சொந்த செலவில் வீடு வீடாக சென்று வழங்கினர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," முன்னுரிமை, முன்னுரிமையற்றவர்கள் என்கிற அடிப்படையில்லாமல் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் இரண்டு மடங்கு அரிசியை பெற்றுக்கொள்ள தமிழ்நாடு அரசு வழி செய்துள்ளது.
நான்கு பேர்களை கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் மே மாதத்திற்கு 50 கிலோ அரிசியும் ஜுன் மாதத்திற்கு 50 கிலோ அரிசியும் பெற்றுக்கொள்ளலாம். ஐந்து நபர்களை கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் மே, ஜுன் மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 62 கிலோ அரிசியினைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஆறு பேர்களை கொண்ட குடும்ப அட்டைதார்கள் மே, ஜுன் மாதத்திற்கு ஒவ்வொரு மாதமும் 75 கிலோ அரிசியை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். இன்னும் ஓரிரு நாள்களில் அனைவருக்கும் பொருள்கள் வழங்கப்படும்.
அந்தந்தப் பகுதியிலுள்ள மாவட்டச் செயலாளர்கள், அதிமுக கட்சி நிர்வாகிகள் மக்களுக்கு அவர்களால் முடிந்த உதவிகளைச் செய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உத்தரவிட்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் நன்னிலம் தொகுதியில் மட்டும் 97 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு அரிசி உள்ளிட்ட 16 வகையான தொகுப்பு அடங்கிய பெட்டியினை வீடு வீடாக வழங்கி வருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? - கமல்ஹாசன்