இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவித்தது. அதோடு, அன்றைய தினத்திலிருந்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்தது.
அதேபோல், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் தினத்தில் தமிழகத்தில் திருவாரூர் உள்ளிட்ட18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அறிவித்த நாள் முதல் அமலுக்கு வந்து இன்றுடன் மூன்று தினங்கள் ஆகியுள்ள நிலையில், திருவாரூர் மாவட்டத்தின் நகர் புறங்களில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படும் பணிகள் மந்த நிலையில் நடந்து வருகிறது.
மேலும், திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொடிகள், பேனர்கள், சின்னங்கள் மறைக்கப்பட்ட போதிலும் அரசு அலுவலகத்திற்குச் சொந்தமான சுவர்களில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படாத நிலையில் உள்ளது.
இக்காரணங்களால் திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.