திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள அகரகொத்தங்குடி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், இந்தக் கிராமத்தின் மக்கள் விவசாயத்திற்குப் பயன்படுத்தும் வெட்டாற்றின் ஓரமாக பேரளம் பேரூராட்சிக்குட்பட்ட இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் அனைத்தும் ஆற்றின் கரையோரம் கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது.
இதனால் அருகில் உள்ள அகரகொத்தங்குடி கிராம மக்களுக்குத் தொற்று நோய் பரவும் அபாயமும் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்துப் பேசிய அகரகொத்தங்குடி கிராம மக்கள், 'எங்களுடைய கிராமத்தில் 100 குடும்பத்திற்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இதில் பள்ளி மாணவர்களும் குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, பேரளம் பேரூராட்சியின் குப்பைகள் முழுவதும் ஆற்றின் கரையோரங்களில் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால், அதிலிருந்து வரக்கூடிய புகைகள் முழுவதும் எங்கள் கிராமத்திற்குத் தான் வருகிறது.
குப்பைகளை அகற்ற கோரிக்கை
அதனால் எங்கள் கிராமத்தில் உள்ள மக்களுக்கும் குழந்தைகளுக்கும் தொற்றுநோய்களும் சுவாசக் கோளாறுகளும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆற்றின் அருகில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்தப் புகைகள் முழுவதும் பள்ளிக்குச் செல்வதால் பள்ளி மாணவர்களுக்கு சுவாச நோய்கள், கேன்சர் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆற்றின் ஓரத்தில் கொட்டப்படுவதால், குப்பைகள் முழுவதும் ஆற்றில் நீர் வருவதற்குத் தடையாக அமைந்துள்ளதால், அதனை நம்பியுள்ள சுமார் 700-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் முறையான பாசன வசதி பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்துப் பலமுறை பேரளம் பேரூராட்சி அலுவலர்களிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
எனவே, கிராம மக்களின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு உடனடியாக குப்பைகளை அகற்றி மாற்று இடத்திற்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: காவிரியில் கழிவுகள் கலப்பதால் மாசுபாடு- சென்னை ஐஐடி தகவல்