மாவட்ட ஊராட்சிக் குழு: திமுக வாகை
திருவாரூரில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களைக் கொண்டு மாவட்ட ஊராட்சி, ஒன்றியக் குழுத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெற்றது. காலையில் தலைவர் பதவி, பிற்பகலில் துணைத் தலைவர் பதவிகளுக்கான போட்டி நடைபெற்றது.
இதில் முதல் கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சி அலுவலகம் முகமையில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுகவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரும், துணைத் தலைவராக சேகர் (எ) கலியபெருமாள் என்பவரும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டனர்.
மொத்தம் 17 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களில் அதிமுக மூன்று உறுப்பினர்களையும், திமுக கூட்டணி 14 உறுப்பினர்களையும் கொண்டுள்ளன. திமுக பெரும்பான்மையாக இருந்தால் அதிமுக உறுப்பினர்கள் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை.
திமுக மகுடம் சூடிய ஒன்றியங்கள்
இதேபோன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் ஊராட்சி ஒன்றியக் குழு அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவருக்கான போட்டி நடைபெற்றது. இதில், திமுக கூட்டணி-அதிமுக கூட்டணி வெற்றிபெற்ற இடங்கள் குறித்து காணலாம்.
- திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவராகத் திமுகவைச் சேர்ந்த தேவா, துணைத் தலைவராகத் திமுகவைச் சேர்ந்த தியாகராஜன் தேர்வுசெய்யப்பட்டனர்.
- நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவராகத் திமுகவைச் சேர்ந்த செந்தமிழ் செல்வன், துணைத் தலைவராகத் திமுகவைச் சேர்ந்த ஞானசேகரன் தேர்வுசெய்யப்பட்டார்கள்.
- கொரடாச்சேரி ஒன்றியக் குழுத் தலைவராகத் திமுகவைச் சேர்ந்த உமா பிரியா, துணைத் தலைவராகத் திமுகவைச் சேர்ந்த பாலசந்தர் தேர்வுசெய்யப்பட்டனர்.
- திருத்துறைப்பூண்டி ஒன்றியக் குழுத் தலைவராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாஸ்கர், துணைத் தலைவராகத் திமுகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் தேர்வுசெய்யப்பட்டார்கள்.
- கோட்டூர் ஒன்றியக் குழு பெருந்தலைவராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மணிமேகலை, துணைத் தலைவராகத் திமுகவைச் சேர்ந்த விமலா ரவிச்சந்திரன் தேர்வுசெய்யப்பட்டனர்.
அதிமுக கைப்பற்றிய ஒன்றியங்கள்
- நன்னிலம் ஒன்றியக் குழு பெருந்தலைவராக அதிமுகவைச் சேர்ந்த விஜயலட்சுமி குணசேகரன், துணைத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த சி.பி.ஜி. அன்பழகன் தேர்வுசெய்யப்பட்டார்கள்.
- குடவாசல் ஒன்றியக் குழுத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த கிளாரா செந்தில், துணைத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த தென்கோவன் தேர்வுசெய்யப்பட்டனர்.
- வலங்கைமான் ஒன்றியக் குழு பெருந்தலைவராக அதிமுகவைச் சேர்ந்த சங்கர், துணைத் தலைவராக அதிமுக வாசுதேவன் தேர்வுசெய்யப்பட்டார்கள்.
- மன்னார்குடி ஒன்றியக் குழுத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த மனோகரன், துணைத் தலைவராக இந்திய கம்யூனிஸ்ட் (திமுக கூட்டணி) கட்சியைச் சேர்ந்த வனிதா அருள்ராஜன் தேர்வுசெய்யப்பட்டனர்.
- முத்துப்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த கனியமுதா, துணைத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த கஸ்தூரி தேர்வுசெய்யப்பட்டார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 176 ஒன்றியக் குழு உறுப்பினர்களில் 96 இடங்களில் திமுக, 64 இடங்களில் அதிமுக, 16 இடங்களில் சுயேச்சைகள் வெற்றிபெற்றனர். இந்நிலையில் ஒன்றியக் குழுத் தலைவர் போட்டியில் திமுக, அதிமுக தலா ஐந்து ஒன்றியங்களைக் கைப்பற்றி சம பலத்தில் உள்ளன.