திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை விவசாயத்தை தவிர வேறு பிரதான தொழில் இல்லாத நிலையில், குறுவை சாகுபடியானது சுமார் இரண்டரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்டு வருகிறது. ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதனால் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யலாம் என்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மற்றொருபுறம் வாய்க்கால் தூர்வாரப்படாத காரணத்தினால், 20 ஆண்டுகளாக சாகுபடி செய்ய முடியாமல் விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வேறு தொழில்களுக்கு மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
20 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருக்கும் வாய்க்கால் திருவாரூர் ஓடம்போக்கியார் ஆற்றில் இருந்து பிரிவது திருவாரூர் வீச்சினால் வாய்க்கால் என்று அழைக்கக்கூடிய பி சேனல் வாய்க்கால், அம்மா தோப்பு என்ற இடத்தில் இருந்து பிரிந்து மூளை உள்ளிட்ட கிராமங்கள் வழியாக ஆறு கிலோமீட்டர் வரை சென்று பாசன வசதி பெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக இந்த வாய்க்கால் தூர்வாரப்படாத கழிவு நீர் சென்று கால்வாயில் புதர்கள் மண்டிக் வாய்க்கால் தடயங்கள் தெரியாமல் போய்விட்டது. இந்த வாய்க்காலை நம்பி சுமார் 1000 ஏக்கர் சாகுபடி செய்து வந்த விவசாயிகளும், நூற்றுக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களும் விவசாயம் செய்ய முடியாமல் பலர் 300 ஏக்கர் விளை நிலத்தை விற்றுவிட்டனர். அந்த 300 ஏக்கர் விளை நிலமும் தற்போது வீட்டுமனைகளாக மாறியும் கருவேல மரங்கள் சூழ்ந்து காடு போல காட்சியளிக்கிறது. ஒரு சில விவசாயிகள் ஆழ்துளை கிணறு மூலம் 100 ஏக்கர் பரப்பளவில் மட்டும் விவசாயம் செய்து வருகின்றனர்.
மேலும் ஆண்டுதோறும் குடிமராமத்து மற்றும் தூர்வாருவதற்காக சிறப்பு திட்டத்தை ஏற்படுத்தி நிதி ஒதுக்கி பல்வேறு ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வரும் நிலையில், இந்த வீச்சினால் வாய்க்காலை தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை தூர்வாரப்படவில்லை. குடிமராமத்து பணி திட்டத்திற்காக 20 கோடி ரூபாய் நிதியை திருவாரூர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. இந்த குடிமராமத்து திட்டத்தின் மூலம் நிதியை ஒதுக்கி இந்த ஆண்டாவது தூர்வாரி ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தை அரசு பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மின்சார திருத்தச் சட்ட வரைவு: திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டம்!