திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு வந்தனர். பருத்தி கொள்முதல் செய்வதற்காக திருவாரூர், மூங்கில்குடி, குடவாசல் பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்திகள் ஏலம் எடுக்கப்பட்டன.
ஆனால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனை செய்யப்பட்டு ஒரு மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் ஏற்றப்படவில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பருத்தி சாகுபடி செய்து விற்பனை செய்யும்போது அரசு விவசாயிகளுக்கு போதுமான விலையை நிர்ணயம் செய்யாமல், ஒரு கிலோ பருத்தி ரூ.30 முதல் ரூ.35 வரை மட்டுமே கொள்முதல் செய்தது. இதுவே விவசாயிகளுக்கு பேரிடியாக இருந்தது. முன்பு ரூ.50 வரை கொள்முதல் செய்யப்பட்ட பருத்தி, தற்போது குறைவான விலைக்குதான் விற்பனைக் கூடத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனை செய்வதற்காக 10 நாட்களுக்கும் மேலாக காத்திருந்து, மழை நேரத்திலும் பல்வேறு இடர்பாடுகளை தாண்டி விற்பனை செய்தோம்.
அதற்கான பணம் இன்று வரை விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு வரவில்லை. ஒரு மாத காலம் தாண்டிவிட்டது. அடுத்த சாகுபடி செய்வதற்கு இந்த பணத்தை வைத்துதான் ஈடுபட முடியும்.
எனவே, உடனடியாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு, பருத்திக்கான பணத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:'சமநிலை பகுதியில் மிளகு விவசாயம் செய்ய விருப்பமா?' நம்பிக்கையை விதைக்கும் விவசாயி பாலுசாமி!