சுஜித் என்ற இரண்டு வயது குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததையடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயனற்றுக் கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளை முறையாக மூட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்திலுள்ள பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகளை சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் உடனடியாக பாதுகாப்பாக மூடிவைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கான ரிக் இயந்திரம் வைத்திருப்பவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் பதிவு சான்று பெற்றிருக்கவேண்டும். புதிதாக ஆழ்த்துளைக் கிணறு மற்றும் திறந்தவெளி கிணறு அமைப்பவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் விண்ணப்பித்து உரிய அனுமதி பெற்று செயல்பட வேண்டும் என்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், சேலம் மாவட்டத்தில் உள்ள பயன்பாடற்ற கைவிடப்பட்ட ஆழ்த்துளைக் கிணறுகளை உடனடியாக மூட உள்ளாட்சித் துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சி.அ. இராமன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குப்பையால் சூழப்பட்ட ஆழ்த்துளைக் கிணறு - மூடக் கோரிக்கை!