திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்தவர் ஜோதி(24). இவருக்கும் இவரது கணவர் முருகேசன்(40) என்பவருக்கும் ஸ்ரீசாந்த்(5), அர்ச்சனா(3), தையல்நாயகி என்ற மூன்று மாத கைக்குழந்தை என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கர்ப்பப்பை பிரச்னை காரணமாக ஸ்கேன் எடுக்க திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றபோது உடன் யாரும் இல்லாததால் குழந்தையை அருகில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் கொடுத்துச் சென்றதாகவும், பின்னர் தனது குழந்தை காணாமல் போய்விட்டதாகவும் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் நேற்று ஜோதி புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், ஜோதி முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதில் காவல்துறைக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது. இறுதியில், தன் குடும்பச் சுமை காரணமாக பெண் குழந்தையை வளர்க்க முடியவில்லை எனவும், குழந்தை இல்லாத தம்பதியிடம் குழந்தையை கொடுத்ததாகவும் ஜோதி ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர், திருவாரூர் தாலுகா காவல் துறையினர் ஜோதியின் குழந்தையை மீட்டுக் கொடுத்தனர்.
இதனையடுத்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் ஜோதியையும் அவரது உறவினர்களையும் அழைத்து குழந்தைகளை வளர்க்க முடியவில்லை எனில் தமிழ்நாடு அரசின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் ஒப்படைக்கலாம் அல்லது அரசு முறைப்படி குழந்தைககள் இல்லாத தம்பதிக்கு ஒப்படைக்கலாம் என அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் மூன்று மாத பெண் குழந்தை மாயம்!