திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராம் பிரியா(20). இவர் அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (29) என்ற இளைஞரை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
காதலர்கள் இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பிரியாவைத் திருமணம் செய்து கொண்டால், தற்கொலை செய்து கொள்வோம் என விக்னேஷை அவரது பெற்றோர் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் ராம்பிரியாவுடனான தன் காதலை விக்னேஷ் துண்டித்துக் கொண்டார்.
இதனையறிந்த ராம்பிரியாவின் பெற்றோர்கள், அவருக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய நிச்சயம் செய்துள்ளனர். வரும் 25ஆம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில், விக்னேஷ் வீட்டிற்கு சென்ற ராம்பிரியா, தன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது, மீறினால் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெண் வீட்டாரிடம் காட்டிவிடுவேன் எனக் கூறியுள்ளார்.
விக்னேஷ் வீட்டிற்கு ராம்பிரியா சென்றபோது, அவரது சாதி பெயரைச் சொல்லி திட்டி அசிங்கப்படுத்திய விக்னேஷின் பெற்றோர், வீட்டை பூட்டிவிட்டு விக்னேஷுடன் தலைமறைவாகி விட்டனர்.
இதனால் மனமுடைந்த ராம்பிரியா, தன்னை காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி விக்னேஷின் வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தொடர்ந்து கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனை: பெண் குண்டர் சட்டத்தில் கைது!