திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 81). இவர், மஸ்கட்டில் வசிக்கும் யோகா ஆசிரியை மற்றும் தெரபிஸ்டான தனது மருமகளிடம் யோகா கற்றுக்கொண்டு, கடந்த 10 வருடங்களாக யோகா செய்து வருகிறார். யோகாவின் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு, மஸ்கட்டில் 108 முறை தொடர்ந்து சூரிய நமஸ்காரம் செய்து லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சரஸ்வதி மஸ்கட்டில் இருந்து கீரனூர் வந்துள்ளார். இதனையடுத்து, தனது மருமகள் மஸ்கட்டில் இருந்து ஆன்லைன் மூலமாக, கீரனூர் பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு யோகா நடத்தி வரும் வகுப்புகளில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் தினந்தோறும் யோகா செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (டிச.30) கீரனூர் தாமரை நகரில் உள்ள வையநிதி சேவாலயாவில், 108 முறை இடைவிடாமல் சூரிய நமஸ்காரம் செய்து, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார். இந்த சாதனையை அவர் 45 நிமிடம் 59 வினாடிகளில் செய்து முடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையில், அவருடன் இணைந்து, ஆன்லைன் மூலம் யோகா பயின்று வரும் மாணவ, மாணவிகளும் 108 முறை சூர்யா நமஸ்காரம் செய்தனர்.
108 முறை சூர்யா நமஸ்காரம் செய்து முடித்த நிலையில், சரஸ்வதி பாட்டியை உற்சாகப்படுத்தும் விதமாக அரங்கத்தில் இருந்த அனைவரும் 108 முறை கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். இதனையடுத்து, சரஸ்வதி பாட்டிக்கு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸின் சார்பில், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
இது குறித்து, சரஸ்வதி பாட்டி கூறுகையில், "நான் எனது 70 வயது முதல் எனது மருமகளிடம் யோகா கற்றுக்கொள்ள தொடங்கினேன். யோகாவில் அதிக ஆர்வம் ஏற்பட்டதை தொடர்ந்து, மஸ்கட்டில் 108 முறை இடைவிடாமல் சூரிய நமஸ்காரம் செய்து செய்து கடந்த 2018ல் லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸில் இடம்பெற்றேன். தற்போது, மீண்டும் 108 முறை இடைவிடாமல் சூர்ய நமஸ்காரம் செய்து, இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸில் இடம் பெற்றுள்ளேன். 108 முறை சூர்ய நமஸ்காரம் செய்ததாக தெரியவில்லை, அந்த அளவுக்கு எளிதாக இருந்தது" என மகிழ்ச்சியோடு கூறினார்.
இதையும் படிங்க: 2024 புத்தாண்டு கொண்டாட்டம்:புதுச்சேரியில் கடற்கரையில் குவியும் சுற்றுலா பயணிகள்..!